ஞாயிறு, 3 ஜூன், 2018

கோவையில் பெருமளவில் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் June 2, 2018

கோவையில் அச்சிடப்பட்ட ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  

கோவை, சாய்பாபா காலனி பகுதியில் காவல்துறையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருட்டு வாகனத்தில் பயணம் செய்த ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது சட்டைப்பையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை பார்த்து, சோதனையிட்டதில் அவை கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து ஆனந்திடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டபோது, அவர் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், சாய்பாபா காலனி அடுத்த வேளண்டிபாளையம் பகுதியில், கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் இடத்திற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். 

அங்கு அச்சிடப்பட்ட நிலையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள கணிணி, பிரிண்டர் மற்றும் இதர பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து ஆனந்தை கைது செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவருடன் இணைந்து கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்ற குற்றவாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.