வியாழன், 21 ஜூன், 2018

​எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பேர் தற்கொலை முயற்சி! June 21, 2018

Image

அரூர் அருகே எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி கிராமத்தில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தி அளவெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரகுமார், அவரது மனைவி, மகன்கள் உட்பட அவருடைய உறவினர்கள் 7 பேர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து எட்டு வழி சாலைக்கு நிலம் அளவு எடுக்கும் பணி அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்த அடுத்த பஞ்சாயத்தான எ.பள்ளிப்பட்டி கிராமத்திலிருந்து அளவெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மேலும் விவசாயி சந்திகுமார் கூறும்போது இருளப்பட்டி கிராமத்தில் உள்ள தங்கள் தோட்டத்தில் காலை 5 மணியளவிலிருந்து காவல் துறையினர், உளவு பாதுகாப்பு துறை, தனிப்பிரிவு, நக்சல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தங்களை கண்காணித்து வருவதாகவும், அதன் பிறகு நிலம் கையகபடுத்தி ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் அளவெடுக்க காவல் துறையினரின் பாதுகாப்போது அளவெடுக்க வந்தனர். 

அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நானும் தங்கள் குடும்பத்தினரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டோம் எனவும், இந்த சாலையை அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், உடனடியாக இந்த எட்டு வழி விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடவேண்டும் என தெரிவித்தார். 

இந்த போராட்டம் இனி தொடரும் எனவும் எட்டு வழி சாலையை தமிழகத்தில் அமைக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு குரல் கொடுக்கும் மன்சூர் அலிகான், பியூஸ் மனுஸ், வளர்மதி உள்பட சமூக ஆர்வலர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என தெரிவித்தார்