திங்கள், 4 ஜூன், 2018

சென்னை மக்களை மகிழ்வித்த கோடை மழை! June 3, 2018

Image

கோடை வெயிலால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் முதல் சென்னையில் அண்ணாநகர், திருமங்கலம், கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், பல்லாவரம், நீலாங்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகளும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு புழுதி உழவு செய்ய ஏதுவாக இந்த மழை இருக்கும் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் சேலம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்