மத்திய அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் திட்டமிட்டபடி நாளை முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரிக் கட்டண உயர்வு போன்றவற்றைக் கண்டித்தும் 3-ஆம் நபர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்காகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அவர்களை இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இது தொடர்பாக, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமார் மற்றும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திர சிங் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் நாளை முதல் ஓடாது என அறிவித்தனர். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் எனவும், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.