ஞாயிறு, 17 ஜூன், 2018

பெண்கள் மற்றும் முதியவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தற்காப்பு கருவி! June 16, 2018

Image

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் மற்றும் பெண்களை திருடர்களிடமிருந்து காப்பாற்றிட வகையிலும், தங்கசங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களின் போது தற்காத்துக்கொள்ளும் வகையிலான கருவி ஒன்றை சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். 

சென்னையில் கடந்த சில வாரங்களாக அதிகளவில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் 3 வகையான கருவிகளை  வடிவமைத்துள்ளார்.

வீட்டில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தனியாக இருக்கும் போது, திருடர்கள் யாராவது அத்துமீறி நுழைந்தால் அது குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை, கைகடிகார வடிவில் பொறியாளர் ராதாகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். கைகடிகார கருவியை அழுத்தினால்,  ஒரு பெண் " காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள" என அலறல் ஒலி எழுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்களை குறிவைத்து, நிகழ்ந்திடும் கொலை சம்பங்களை தடுக்கும் வகையில், இக்கருவியை வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள்  செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இடுப்பில் கட்டும் பெல்ட் வடிவில் மற்றொரு கருவியையும் பொறியாளர் ராதாகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். 
 
வாகனத்தில் செல்வோரிடம் வழிப்பறி அல்லது செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களின் போதும் தற்காத்துக்கொள்ளும் வகையில் இருசக்கர வாகனத்தில் பொருத்தும் கருவியையும் பொறியாளர் ராதாகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்,. ரிமோட் மூலம் இயங்கும் இந்த கருவியை வாகனத்தின் சாவியில் இணைக்கப்பட்டிருப்பதால் ஆபத்து 
நேரத்தில் இதை எளிதில் கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆபத்து நேரங்களில் இந்த கருவிகள் மூலம் அருகிலிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும் வகையில் விரைவில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், காவல்துறையினர் இதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் பொறியாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.