சனி, 23 ஜூன், 2018

சுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவதால் மரணம் ஏற்படுமா? June 22, 2018

Image

சுரைக்காய் ஜூஸை பருகிய பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசப்புத்தன்மை அதிகம் நிறைந்த ஜூஸ் பருகுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

புனே நகரைச் சேர்ந்த 41 வயது பெண்மணி ஒருவர் தினமும் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடனும், எந்தவித மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் இல்லாத இவர், கடந்த ஜூன் 12ஆம் தேதி காலை 9.30 மணியளவில் வழக்கம் போல 5 கிலோ மீட்டர் தூரம் அன்றாட ஓட்டப்பயிற்சியினை மேற்கொண்டார்.  

பின்னர் ஒரு கப் சுரைக்காய் ஜூஸை பருகிவிட்டு அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். ஜூஸை பருகிய அரை மணி நேரத்தில் செல்லும் வழியிலேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக வீடு திரும்பிய அவருக்கு வயிற்று போக்கும் ஏற்பட்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடுமையான வயிற்று வலி, மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஆகியவை என தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மதியம் 1.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்ததோடு இருதய அடைப்பும் ஏற்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஓரளவு உடல்நலன் தேறிய நிலையில் ஜூன் 15ஆம் தேதி இரவு அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் ஜூன்16ஆம் தேதி, முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் பரிதாபமாக மரணமடைந்தார்.

உடற்பயிற்சி ஆர்வலரான அந்தப் பெண்மணி, தினமும் ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளை தவறாது செய்து வந்த தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்தார். எனினும் ஒரு கோப்பை சுரைக்காய் ஜூஸ் பருகியது அவரின் உயிரை பறித்துள்ளது, சுரைக்காய் ஜூஸ் பருகுவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரைக்காய் ஜூஸ் பருகுவது உயிரைப்பறிக்குமா? மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?

அவசர சிகிச்சை நிபுணரான கபில் போரவாகே கூறுகையில், இது போன்று ஒரு சில சம்பவங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது, குறிப்பாக புனே பகுதிகளில் வசிப்போர் காய்கறி ஜூஸ் பருகுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், இது போன்ற ஜூஸ்களில் கசப்புத்தன்மை அதிகரித்து காணப்பட்டால் அவற்றை பருகக் கூடாது, அவை விஷத்தன்மை கொண்டிருக்கும் என்றார். மேலும் இந்த விஷத்தை முறிக்கும் மாற்று மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு சுரைக்காய் மட்டுமல்லாது கசப்புத்தன்மைமிக்க ஜூஸ் பருகுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.