திங்கள், 25 ஜூன், 2018

அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் கடும் நடவடிக்கை June 25, 2018

Image

அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது. 

ஆளுநர் பன்வாரிலாலின் சுற்றுப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டங்களை நடத்தி வருகிறது. நாமக்கல்லில் கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் தகவல் தொடர்புத் துறையின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான முழு உரிமை அரசியல் சாசனப்படி ஆளுநருக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் தனது பயணத்தின்போது, எந்த துறையை குறித்தும் குறை கூறுவதோ, உத்தரவு பிறப்பிப்பதோ இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் சுற்றுப் பயணம் மேற்கொள்வதைத் திரித்து ஆளுநர் ஆய்வு செய்வதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறி வருவது மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விஷயத்தில் ஆளுநருக்கு உள்ள சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை புரிந்து கொள்ள போதுமான கால அவகாசமும் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு உள்ள சட்ட அதிகாரத்தை தொடர்ந்து விமர்சித்து வந்தால், அது சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கும் செயல் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் அலுவலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் ஆளுநரின் சுற்றுப் பயணம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.