உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் தொடர்பான செய்தி, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அங்கு ஆற்றுப் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்படும், என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த நூறு ஆண்டுகளாக, சம்பக்காடு பாதையை மலைவாழ் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென கடந்த பிப்ரவரி மாதம், சம்பக்காடு பகுதிக்கு சொந்தம் கொண்டாடிய கேரள வனத்துறை, கம்பிவேலி அமைத்து பாதையை மூடியது. இதனால் பொருட்கள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகவும், கூட்டாறு வழியாக 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டனர். இதனால், தளிஞ்சி ஆற்றில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதுதொடர்பான செய்தி, கடந்த 15-ம் தேதி நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்நிலையில், இச்செய்தியை கண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தளிஞ்சியில் ஆற்றுப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியுள்ளார். திருப்பூரில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார்.