உதகை அருகே செயல்பட்டு வந்த மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உதகை அருகே உள்ள சாண்டிநல்லாவில், ஸ்டெர்லிங் பயோடெக், என்ற தொழிற்சாலையில், எலும்புகளை கொண்டு மருந்துகளுக்கான ரசாயன மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உருவாகும் ரசாயனக் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், அருகில் உள்ள பைக்காரா மற்றும் காமராஜர் சாகர் அணைகளுக்கு நீண்ட காலமாக திறந்துவிடபட்டுள்ளது.
இதனால் கடுமையான துர்நாற்றம் வீசியதால், சாண்டிநல்லா மற்றும் அதனை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு வந்தனர். மேலும், ஏராளமானோருக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தபட்ட நோய்களும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா மக்களும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொழிற்சாலையை மூட கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலையை ஆய்வு செய்த தமிழக மாசு கட்டுபாட்டு துறை அதிகாரிகள், ரசாயன கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்குமாறு ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
ஆனால் 8 கோடி ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த ஆலையை மூட, தமிழக மாசுகட்டுபாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்ததுடன் முதற்கட்டமாக ஆலைக்கு வழங்கபட்டுள்ள மின் இணைப்பையும் துண்டிக்க உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.