
விருத்தாச்சலம் அருகே அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சு.கினனூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் 13வயது மகள் மகாலட்சுமி கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற அவர், பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த மாணவியை, ஆசிரியர்கள் மீட்டு, கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போதிய மருத்துவர்கள நியமிக்கக் கோரியும், பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிதம்பரம் - விருத்தாசலம் சாலையில் மறியில் ஈடுபட்டனர்.