அமெரிக்காவுக்குள் அகதிகளாக வருபவர்களை தண்டிக்க பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியே பிரித்து சிறை வைக்கப்பட்ட கொடுமையான நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், தாயிடமிருந்து குழந்தைகளை தனியே பிரிக்கும் கொள்கை முடிவிலிருந்து அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், மெக்ஸிகோ உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களை தடுக்க வழி தெரியாமல் விழி பிதுங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ZERO TOLERENCE POLICY என்ற நடைமுறையை கொண்டுவந்தார்.
அதன்படி ஏப்ரலுக்கு பின்னர் அகதிகளாக குடியேறியவர்களின் குடும்பங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தனித்தனியே பிரிக்கப்பட்டனர், ஆண்கள் சிறைகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்தனி காப்பகங்களிலும் அடைக்கப்பட்டனர். தாயுடன் ஒட்டிக்கொண்டிருந்த குழந்தைகள், தாயிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டன. இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ், பென்சில்வேனியா மாகாணங்களில் அமைக்கப்பட்ட காப்பகங்களில் இரண்டாயிரத்து 342 குழந்தைகள் அடைக்கப்பட்டன. தாயை பிரிந்து தனியே தவித்த குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் சம்பவம் குறித்து செய்தி அமெரிக்காவின் எம்எஸ்என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தச் செய்தியை வாசித்த செய்தியாளர் ராச்செல் மேடோ, குழந்தைகள் கண்ணீர் விட்டு அழும்போது வேதனையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டே அழத் தொடங்கினார். அதிபர் டெனால்ட் டிரம்பின் புதிய கொள்கை முடிவுக்கு, அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கண்டனக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது இதயமற்ற, மனிதநேயமற்ற செயல் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் (HUMAN RIGHTS WATCH) கண்டனம் தெரிவித்தது.
புதிய கொள்கையின் தாக்கம் மெக்ஸிகோவிலும் ஒலிக்கவே தொடங்கின. அமெரிக்காவுக்கு சென்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வருபவர்கள் சற்று பின்வாங்கவே செய்தனர். அதிபர் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி, லாரா புஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து, மனிதநேயமற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் டிரம்பின் செயலுக்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பு தெரிவிக்க தவறவில்லை. இதையடுத்து, எதிர்ப்புகளை பரிசீலித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அகதிகளாக வருவோரின் குடும்பத்தைப் பிரிக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் விதியில் மாற்றம் செய்து கையெழுத்திட்டார். அகதிகளாக வரும் குடும்பங்களை பிரிக்கப் போவதில்லை என்று கூறிய அவர், குடும்பங்களை பிரிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபரின் புதிய உத்தரவு, எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் நிர்வாக உத்தரவில் குறிப்பிடவில்லை என்றே தெரிகிறது.