வெள்ளி, 22 ஜூன், 2018

​மனிதர்களிடம் சைகையில் பேசிய அரியவகை கொரில்லா உயிரிழப்பு! June 22, 2018

Image


மனிதர்களிடம் சைகை மூலம் பேசி வந்த கோகோ என்னும் கொரில்லா, அதனுடைய 46வது வயதில் உயிரிழந்த சம்பவம் விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் உள்ள விலங்குகள் பூங்காவில் 1971ம் ஆண்டு இந்த கொரில்லா பிறந்தது. அங்கு உள்ள காப்பாளர்கள், அமெரிக்க சைகை மொழி சிலவற்றை கோகோவிற்கு கற்பித்தனர். அதனை நன்றாக கற்று, அதனுடைய தேவைகளையும், உணர்வுகளையும் அந்த சைகை மொழி மூலம் மற்றவர்களுக்கு புரியவைத்தது.

இதுமட்டுமல்லாமல், மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வார்த்தைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு அசாத்திய திறன் உடையதாகவும் கோகோ இருந்தது. கொரில்லாவின் இந்த திறனை, விலங்கு உளவியலாளர் Francine Patterson என்பவர் ஆவணப்படுத்தினார். அதன்மூலம் கோகோவை பற்றி அறிந்த விலங்கு ஆர்வலர்கள், கோகோவை பற்றி அதிகமாக பேசத்தொடங்கினர். மேலும், கொரில்லாவிற்கே ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தது. அதுமட்டுமல்லாமல், பூனைக்குட்டிகளையும் பாதுகாத்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பெரும்பாலான மனிதர்களின் IQ அளவு 100லிருந்து 115 வரை இருக்கிறபோதிலும், கோகோவின் IQ அளவு 75 லிருந்து 95 வரை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த IQ அளவினால்தான் வார்த்தைகளையும் சைகைகளையும் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தனர்.

சில விஞ்ஞானிகளுக்கு கோகோ கொரிலாவின் அசாத்திய திறன் பற்றி சிறிது சந்தேகம் இருந்தாலும், பல நிறுவனங்கள் இந்த கொரில்லாவை பற்றி ஆவணப்படம் தயாரித்தது. மேலும், விலங்குகள் பற்றி செய்தி பரப்பும் National Geographic நாளிதழ் நிறுவனம், தங்களது நாளிதழ் அட்டையில் கோக்கோ கொரில்லாவின் புகைப்படத்தை வைத்து சிறப்பு செய்தது.

இத்தகைய அசாத்திய திறன் உடைய கோகோ கொரில்லா, கடந்த புதன்கிழமை உயிரிழந்த செய்தி, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அதன் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது