
கிருஷ்ணகிரியில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்களை நேரில் அழைத்துச் சென்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் விதம் பலராலும் பாராட்டப்படுவதாய் உள்ளது.
6-ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரலாற்று பாடத்தை அவற்றுக்கான சான்றாதாரங்களான தொல்லியல் எச்சங்கள், பாறை ஓவியங்கள், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், எழுத்துப் பொறிப்புள்ள ஓடுகள், காசுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியக் குறிப்புகள், பயணிகளின் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு விளக்கும் முயற்சியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஈடுபட்டுள்ளது பலராலும் பாராட்டப்படக் கூடியதாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் புதியகற்கால மக்கள் பயன்படுத்திய கற்காலக்கருவிகள், சுடுமண் பொம்மைகளை பார்க்கும் வாய்ப்பும், அவற்றை தொட்டறிந்து புரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் ஆசிரியர்களின் சீரிய முயற்சியின் காரணமாக வழங்கப்பட்டது. மேலும், களிமண் கொண்டு பொம்மைகள் செய்யவும் கற்றுத்தரப்பட்டது. இதனை அடுத்து, மாணவர் ஒவ்வொருவரும் ஒருபொம்மை செய்து பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனர்.
வரலாற்று பாடத்தை மாணவர்கள் தொல்லியல் சிறப்புமிக்க இடங்களுக்கு நேரில் சென்று அறியும் வகையில் ஜூன் 14ம் தேதி சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவர்கள் புகழ்பெற்ற சோழர்காலக் கோவில் உள்ள பென்னேஸ்வரமடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 3,000 ஆண்டுகள் இடையறாத வரலாற்று அடையாளங்களை வைத்துள்ளது இவ்வூர். இங்குள்ள பெருங்கற்காலச் சின்னங்கள், பாறை ஓவியங்களைப் பார்த்த பின்னர் சோழர்காலக் கோவிலுக்கு மாணவர்கள் சென்றனர்.
கோவில் கருவறையைச் சுற்றியுள்ள கல்வெட்டுகள் பற்றியும் மாணவர்கள் அறிந்தனர். மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசி கூத்தாடும் தேவர்நாட்சியாள் புலிச்சின்னம் பொறித்து வழங்கிய கொடையைப் பற்றியும், இப்பகுதியை 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பையூர் நிலையுடைய மதுராந்தகன் வீரநுளம்பன் பெயரைக் கல்வெட்டில் தொட்டுத்தடவிப் படித்து மகிழ்ந்தனர்.
பின்னர் எழுநிலை கோபுரத்தையொட்டியுள்ள தலைபலிச்சின்னங்களான நவகண்ட சிற்பங்களைப் பார்த்து வியந்தனர். கொட்டாவூர் செல்லும் வழியில் உள்ள நடுகற்களைப் பார்த்தனர். இங்குள்ளவை வீரக்கற்கள், சதிக்கற்கள், புலிக்குத்திப்பட்டான்கற்கள், பன்றிக்குத்திப்பட்டான்கல் ஆகியவற்றையும் கண்டு அவை நடப்பட்ட காலம் சூழல் ஆகியவற்றையும் கேட்டனர்.
புதிய பாடங்களை இவ்வாறு களப்பயணங்களுடன் கற்க ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனையும், அறிவாற்றலையும் விரித்தி செய்ய இயலும் என்பதாலேயே இத்தகைய பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் முருகன், விகா ஆகியோர் இப்பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.