திங்கள், 25 ஜூன், 2018

விளக்கம் என்ற பெயரில் திமுகவை ஆளுநர் மிரட்டுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்! June 24, 2018

Image

விளக்கம்” என்ற பெயரில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தியின் மூலம், அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய ஆளுநர் முயன்றிருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொடர்பு இணை இயக்குநர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்திற்கு முரணாக, ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றிருப்பதற்கு, திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறியுள்ளார். 

ஆளுநரின் இந்த "ஆய்வு" குறித்து திமுக மட்டும் கூறவில்லை என்றும், ஆளுநரின் மாவட்டச் சுற்றுப்பயணம் குறித்துச் செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் அனைத்துமே, “ஆளுநர் ஆய்வு” என்றுதான் செய்தி வெளியிட்டு வருவதாகவும், ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின், உரிமையிலும் அதிகாரத்திலும், அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு மாறாகத் தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளைக் கூட்டி நடத்தும் ஆய்வுக்குத்தான் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“ஆய்வு தொடரும்” என்று ஆளுநர் அறிவித்துள்ளதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவர் தலைமையில் உள்ள அதிமுக அரசும் எதிர்ப்புத் தெரிவிக்க துணிச்சல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் திமுக வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல என்றும், மு.க.ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால், மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க, திமுக தொடர்ந்து  போராடும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.