மக்களிள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிச்சயம் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே,ஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். வழக்குகள் போடுவதால் காங்கிரஸ் கட்சி பணிந்துவிடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று யார் யாரோ அரசியல் பேச ஆரம்பித்துவிட்டதாகக் கூறிய அவர், கமல், ரஜினியின் அரசியல் பற்றி மறைமுகமாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் உள்ள சாதி பேதங்களால், பள்ளி படிப்பை முடித்த மாணவர்களில் 20 சதவீதம் பேர் தான் கல்லூரி செல்வதாகக் கூறினார்.
சாதிய ரீதியான பேதங்களுக்கு அடிப்படையாக இருக்கும் மனுநீதியை காங்கிரஸ், திராவிட இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோர்கள் எதிர்த்ததாக தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்க கூடிய கல்விக் கடன் திட்டம் இன்று முழுமையாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.