செவ்வாய், 5 ஜூன், 2018

‘பிளாஸ்டிக் மாசை முறியடிப்போம்’: உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கம் என்ன? June 5, 2018

Image

இயற்கை வளத்தை பாதுகாக்கும் நோக்கில் 'உலக சுற்றுச்சூழல் தினம்' ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

’பிளாஸ்டிக் மாசை முறியடிப்போம்’ என்ற ஒற்றை நோக்கோடு  ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் அம்பாசிடராக இந்தியாவை அறிவித்திருக்கிறது ஐ.நா சபை. இதைதொடர்ந்து, இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் நடத்தப்படுகின்றன. 

உலகம் முழுவதுமுள்ள பிளாஸ்டிக் பயனபாட்டை பற்றி ஐ.நா வெளியிட்டிருக்கும் முக்கிய புள்ளிவிபரங்கள் படி, ஓராண்டில் சுமார் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுவதும் வாழும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன என்றும், ஒவ்வொரு நிமிடமும் நிரப்பப்படும் ஒரு குப்பை லாரியின் ஒட்டுமொத்த குப்பைகளுக்கு இணையான அளவில் சுமார்  130 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் ஒவ்வொரு ஆண்டும் கொட்டப்படுகின்றன என்றும் தெரியவருகிறது. 

அதுமட்டுமில்லாமல், கடந்த ஒரு நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைவிட அதிக அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த 10 வருடங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது. 

உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில், சுமார் 50% பொருட்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களாக இருக்கின்றன. 

அது போக, ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் நுகர்வோரால் வாங்கப்படுகின்றன என்ற தகவலும் இருக்கின்றது. 

உலகமெங்கும் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த கழிவுகளில், 10 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன என்ற புள்ளி விபரங்கள் நாம் வாழும் பூமி நாளுக்கு நாள் சிதைந்துக்கொண்டிருக்கிறது என்பதை காட்டும் விதமாக இருக்கிறது.

இத்தகைய சுற்றுச்சூழல் சிதைவை குறைக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் சமூக வலைதளங்களிலும் இந்நாளில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு சீனாவில், சுற்றுச்சூழல் தினத்தை நம்பிக்கையுடன் வரவேற்க்கும் விதமாக, 19 ஆம் நூற்றாண்டில் Vincent Van Gogh என்ற பிரபல ஓவியரால் வரையப்பட்ட The Stary Night என்ற ஒரே ஓவியத்தை 150 பேர் தனித்தனியாக வரைந்து, அதை காட்சிப்படுத்தி, சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவதை எடுத்துறைத்தனர்.

#BeatPlasticPollution என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி பிரபலங்களும், பொது மக்களும், தங்கள் வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு சிறந்த மாற்றாக கருதும் மற்ற பொருட்களை வைத்து selfie videoக்களை அப்லோட் செய்து மற்றவர்களையும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும் படி tag செய்கின்றனர். 

இந்தியாவில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தும் நாப்கின்கள் ஒராண்டிற்கு சுமார் 44.9 பில்லியனாக இருக்கும் நிலையில், துணிகளால் ஆன நாப்கின்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று முக்கிய மாற்றாக மக்களால் கருதப்படுகின்றது. 

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பேராபத்தை உணர்த்தும் விதமாக, 80 பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிரிழந்த  திமிங்கலத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்றன.

இந்தியா, பசு பாதுகாப்பில் முக்கிய இடத்தை பிடித்திருந்தாலும், Lucknowவில் ஆண்டுன்றுக்கு சுமார் 1000 பசுமாடுகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் உயிரிழக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை The Art of Living என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. 

சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசாங்கம் என யார் முடிவெடுத்தாலும், சுற்றுச்சூழம் பற்றியான தனிநபர் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இயற்கைச் சிதைவிலிருந்து இந்த பூமியை காபாற்ற முடியும் என்பது தான் நிதர்சனம். 

மேலும், இந்த தினம் கொண்டாட்டத்திற்கான ஒரு நாள் அல்ல என்பதும் மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்டு வரும் தீங்கு எத்தகையது என்பதை உணர்ந்து, நம்மால் ஆன வழிகளில் இயற்கையை காக்க கைகோர்த்து செயல்படத்தொடங்குவதே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவதின் நோக்கம் என்பதும் நாம் புரிந்துகொள்ளவேண்டியதாகும்!