வெள்ளி, 22 ஜூன், 2018

​சாமானியரான சம்பத் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை! June 22, 2018

Image

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குறித்த சிறப்புக் செய்தி....

செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் டிராபிக் ராமசாமி. பொது நல வழக்குத் தொடர்வதோடு நில்லாமல் சமூகப் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் சமூக ஆர்வலர். சாமானியரான சம்பத் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறியதை விவரிக்கிறது இந்த செய்தி..

1934 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் பிறந்த டிராபிக் ராமசாமியின் இயற்பெயர் சம்பத். அவரது தந்தை ரெங்கசாமி வடசென்னை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். ஒரு முறை ரெங்கசாமியின் இல்லத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி தன்னம்பிக்கை உறுதியுடன் தவறுகளை சுட்டிக் காட்டு என டிராபிக் ராமசாமியைப் பார்த்துக் கூறியிருக்கிறார். சமூக அவலங்கள் மீது கவனம் செலுத்த தனக்கு அது தான் உத்வேகம் அளித்ததாக கூறுகிறார் டிராபிக் ராமசாமி. 

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறைக்கு உதவி செய்ததை அடுத்து காவல்துறையினர் அவரை டிராபிக் ராமசாமி என அழைத்தனர். இதனையடுத்து ஆனந்த விகடன் பத்திரிக்கை மனிதர்கள் என்ற தலைப்பிலான கட்டுரையில் டிராபிக் ராமசாமி எனக் கூறி பெருமைப் படுத்தியது. சம்பத் டிராபிக் ராமசாமியாக நிலைக்கத் தொடங்கிய தருணம் இது தான்.

1990 களில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகளை ஒரு வழிச்சாலையாக அப்போதைய காவல் ஆணையர் மாற்றினார். இதனால் விபத்துகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். உடனடியாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஒரு வழி சாலையை மாற்றி அமைத்தார். இதனைத் தொடர்ந்து பல சமூகப் பிரச்சனைகளுக்காக பொது நல வழக்குகளைத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி சில தேர்தல்களிலும் போட்டியிட்டார். 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கிய அவர், 2015ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலைதாவை எதிர்த்துப் போட்டியிட்டார். 


தேர்தல்களில் வெற்றி பெற முடியாவிட்டாலும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காக டிராபிக் ராமசாமி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். டிராபிக் ராமசாமி எதிர்ப்பார்ப்பது இந்த சமூகம் கேள்வி கேட்க வேண்டும், தைரியமாக, தன்னம்பிக்கையோடு யாராக இருந்தாலும் தவறை சுட்டி காட்ட வேண்டும். அந்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே. இவ்வாறு மக்களின் பிரச்சனை ஓரளவாவது தீர வேண்டும். அதுவரை தன்னுடைய போராட்டம் தொடரும் என தளராமல் தெரிவிக்கிறார் டிராபிக் ராமசாமி 

போராட்டங்கள் என்றாலே தீவிரவாதம் என கூறும் சூழலில் தனிமனிதனாக சமூகத்திற்காக, 
அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டம் தான் தீர்வு  தரும் என தன்னம்பிக்கையோடு நிற்கும் டிராபிக் ராமசாமி  தான் ஆகச் சிறந்த உதாரணம் என்பதில் மிகையில்லை