வெள்ளி, 29 ஜூன், 2018

நச்சுக்காற்றை சுவாசிக்கிறதா இந்தியா? June 29, 2018

Image

இந்தியா முழுவதும் ஃபார்மாலிடிஹைட் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு நிறைந்திருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக காற்று மாசு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மேல் பரவி இருக்கும் காற்றில் உள்ள மாசு குறித்த அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபார்மாலிடிஹைட் எனும் வாயு நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

வளிமண்டலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் மற்றும் மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுக்கள் தான் அதிகம் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில் ஃபார்மால்டிஹைட்டின் அளவு மிகவும் குறைவானதே, எனினும் சிறிய அளவு என இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது என்றும், ஃபார்மால்டிஹைட்டினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்

தாவரங்கள், காற்று மாசு, காட்டுத்தீ போன்றவற்றால் உருவாகும் ஃபார்மால்டிஹைட் வாயுவினால், கண்கள், மூச்சக்குழாயில் எரிச்சல் ஏற்படும். மேலும் ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் சமையலுக்காக எறிக்கப்படும் விறகுகள், அறுவடை முடிந்தவுடன விவசாய நிலங்களை எறிப்பதன் மூலமாக அதிகளவில் காற்றில் ஃபார்மால்டிஹைட் பரவுவதாக கூறப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்பு அதிகரிக்கும் காற்று மாசை கண்காணிப்பதற்காக, செயற்கை கோள் மூலம் தரவுகளை சேகரித்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஃபார்மால்டிஹைட்டின் அளவு காற்றில்  மேலும் அதிகரித்தால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

அதிகரிக்கும் உயிரிழப்புகள், அதிர்ச்சி தரும் செயற்கைகோள் தரவுகள் என அனைத்து காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதை உரக்க சுட்டிக்காட்டுகிறது. இந்த பிரச்னையை  அவசரகதியாக அணுகி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தினால் தான் இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.