பயிர்க் கடன் கோரி வங்கியில் விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை ஆசைக்கு இணங்குமாறு வங்கி மேலாளர் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ததாலா பகுதியில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி தனது மனைவியுடன் சென்ற விவசாயி ஒருவர் பயிர்க் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் அந்த வங்கியின் மேலாளரான ராஜேஸ் ஹிவாசே, விவசாயியின் விண்ணப்ப படிவத்தில் இருந்த அவரின் மனைவியின் செல்போன் எண், முகவரி ஆகியவற்றை எடுத்து, அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பயிர்க் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் மேற்கொண்டு கடன் பெற வழிவகை செய்ய வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொலைபேசியில் அழைத்தது மட்டுமல்லாமல் அந்த வங்கியில் பணியாற்றும் உதவியாளர் (Peon) மனோஜ் சவான் (வயது 37) என்பவரை விவசாயியின் வீட்டிற்கே அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு நேரிலும் வற்புறுத்தச் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயியின் மனைவி, வங்கி மேலாளரின் செயல் குறித்து மல்காபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வங்கி மேலாளர் ஆசைக்கு இணங்குமாறும் செல்போனில் பேசும் உரையாடலை பதிவு செய்து ஆடியோ ஆதாரமாகவும் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் கடந்த வியாழக்கிழமையன்று மகராஷ்டிராவில் பூதாகரமாக வெடித்த நிலையில், புல்தானா மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தலைமையேற்று கண்காணிப்பார் என்று மாநில அரசு அறிவித்தது.
இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்து, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த வங்கி உதவியாளர் மனோஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
வங்கி மேலாளர் ஹிவாசே, தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.