திங்கள், 18 ஜூன், 2018

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் மக்கள் அவதி! June 18, 2018

Image

அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய  மாநிலங்களில் மழை வெள்ளப்பாதிப்புகளால், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் தெளபல், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இம்மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.  வெள்ள பாதிப்புகளினால், சுமார் 23ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 1 லட்சத்து 89ஆயிரம் மக்கள் சிக்கி தவித்து அவதியுற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு  புதிதாக 48 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இதே போன்று, திரிபுரா மாநிலத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்டுள்ள 189 நிவாரண முகாம்களில், 40 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்ட  பகுதிகளில் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகளை வழங்கும் பணியில் இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஹோஜய், கர்பி, மேற்கு அங்லாங்க், கோலாகட்  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இம்மாவட்டங்களிலுள்ள  673 கிராமங்களில், ஆயிரத்து 512 ஹெக்டேர் பரப்பில் விளை நிலங்கள் வெள்ளத்தில் முழ்கி சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளில் சுமார்,  4 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக 481 நிவாரண முகாம்கள் அமைத்து, ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 245 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், திரிபுரா மற்றும் அஸ்ஸாம் ஆகியவற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மீட்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து  போர்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.