திங்கள், 4 ஜூன், 2018

கட்சிப் பதவியில் இருந்து கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் திடீர் ராஜினாமா! June 3, 2018

Image


கர்நாடக வடக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாட்டீல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் தான் சார்ந்த வடக்கு கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் கட்சி பலத்த சரிவை சந்தித்ததால் தனது கர்நாடக வடக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சிறிது நாட்கள் முன்னதாக இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ராஜினாமா கடிதம் குறித்து கட்சித் தலைமை இறுதி முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கர்நாடக தேர்தலில் லிங்காயத் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலாகவி, பாகல்கோட், விஜயபுரா, கடாக் மற்றும் தார்வாத் ஆகிய 5 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியால் மொத்தமாக 8 சீட்களையே பெற முடிந்தது.

தேர்தலில் பெற்ற இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்துள்ளதாக எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தால் யாருடைய தயவும் இல்லாமலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கலாம் என்று அவர் ஆதங்கத்துடன் கூறினார்.

எனினும், ம.ஜ.தவினர் காங்கிரஸ் கட்சியினை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படத்தொடங்கியிருப்பதனாலும், ம.ஜ.தவுடன் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய கூட்டணியை பிடிக்காமலுமே பாட்டீல் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கர்நாடக மாநில பாஜக கட்சி, காங்கிரஸ் - ம.ஜ.த கட்சிகளின் அதிகார வேட்கையின் அழிவுக்கு இது ஒரு தொடக்கப்புள்ளி என்று தெரிவித்துள்ளது.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை, உள்கட்டமைப்பு அமைச்சராக இருந்தவர் பாட்டீல், இவர் ஜூன் 2012 முதல் மே 2013 வரை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.