ஞாயிறு, 24 ஜூன், 2018

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! June 24, 2018

Image

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பலால், NGO அமைப்பில் பணியாற்றி வந்த 5 பெண்கள் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று 5 பெண்கள் உட்பட 11 பேர் கொண்ட NGO அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கி துப்பாக்கி முனையில் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு காரில் கடத்திச் சென்றது.

பின்னர் அப்பெண்களை கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்திய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து மேல்மட்ட விசாரணைக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட அந்த பெண்களை 5 பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் மாறி மாறி சுமார் 4 மணி நேரத்திற்கு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் அக்குழுவில் இருந்த ஆண்களை  மரக்கிளையால் அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களை சிறுநீரையும் குடிக்கச் செய்துள்ளனர். இதனை தங்கள் செல்போன்களில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

பாலியல் வன்புணர்வு மற்றும் தாக்குதலுக்கு உள்ளான அப்பெண்கள் 20 முதல் 35 வயதுடையோர். இவர்கள் ஆஷா கிரண் என்ற அரசு சாரா அமைப்பில் (NGO) பணியாற்றி வருபவர்கள். இந்த அமைப்பு உள்ளூர் கிருஸ்துவ மிஷனரி ஆதரவுடன் இயங்கி வந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பி வந்த 11 பேரும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பள்ளியை நடத்தி வந்த அல்ஃபோன்ஸோ ஏலியன் என்ற பாதிரியாரிடம் சென்று அவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டாம் என பாதிரியார் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சஞ்சய் சர்மா என்பவர் இச்ச்செயலை மறைத்த பாதிரியாருக்கு எதிராக காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றத்தை மறைத்த காரணம் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பாதிரியாருக்கும் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட இருவர், குற்றத்தை மறைக்க உதவியதாக பாதிரியார் உட்பட மூவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற மேலும் நால்வரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜார்கண்ட் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் People’s Liberation Front of India - (PLFI) என்ற கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.