
சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவு அஞ்சல்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது.
விரைவு தபாலில் விண்ணப்பம்
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிசெல்வத்தின் மகன் வசந்த், பிளஸ் 2-தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் வசந்த், மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கடந்த 14-ம் தேதி காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்திலிருந்து மருத்துவ கல்வி இயக்குநகரத்திற்கு விரைவு தபாலில் அனுப்பினார்.
மாணவர் வசந்த் அதிர்ச்சி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க 19-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 நாட்கள் காலதாமதாக கடந்த 23-ம் தேதி விண்ணப்பம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நிராகரித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் வசந்த், சிவகங்கை ஆட்சியர் வளாக அஞ்சலகத்திற்கு சென்று விசாரித்தபோது, அஞ்சலக அதிகாரிகளின் அஜாக்கிரதையால், விண்ணப்பம் தாமதமாக சென்றது தெரியவந்தது.
ஊழியரின் அலட்சியம்
நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினர் 96 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், மருத்துவப்படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த மாணவரின் கனவு, அஞ்சல ஊழியரின் அலட்சியத்தால் தகர்ந்து போயுள்ளது. மருத்துவ மாணவரின் விண்ணப்பம் தாமதமாக அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், ஆய்வாளர் தலைமயில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்
தபால் மூலம் காலதாமதமாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பங்களை அனுப்பியதற்கான சான்றுடன் தேர்வுக்குழு தலைவரை அணுகுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 28-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், 19-ம் தேதிக்கு முன்னரே விண்ணப்பங்களை அனுப்பிய சான்றுகளை காண்பித்தால் கருத்தில் கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் மாணவர்கள் நீதிமன்ற வழிகாட்டுதல் பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது