வெள்ளி, 15 ஜூன், 2018

பெங்களூரு நகரின் மிகப்பெரிய கழிவு நீர் தொட்டியாக ‘பெல்லந்தூர் ஏரி’ மாற்றப்பட்டுள்ளது - தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு அறிக்கை! June 14, 2018

Image

பெங்களூரு நகரின் முக்கியப்பகுதியில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரி, அண்மைக்காலங்களில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு அதன் தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்துபோனது.

ஏரியின் தண்ணீரில் மாசுக்கள் அதிகளவில் கலந்ததாலும், இரசாயண மாசுக்கள் கலந்ததாலும் ஏரியின் மேற்பகுதி முற்றிலும் நுரை நிரம்பியதாக காணபட்டது. மேலும் ஏரியில் இருந்த நுரை பறந்து நகர் பகுதிக்கு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

பெல்லந்தூர் ஏரியில் மாசு கலப்பதை தடுத்து நிறுத்தி அதன் தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்யப்பட்டது. இது குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்த நிலையில், தற்போது ஏரி குறித்த நிலவரத்தை அக்குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக அளித்துள்ளது.

அதில், பெங்களூரு நகரின் மிகப்பெரிய கழிவு நீர் தொட்டியாக பெல்லந்தூர் ஏரி மாறியுள்ளதாகவும், கட்டிட கழிவுகள் மற்றும் கழிவு நீர் ஆகியவை இந்த ஏரியை பாழாக்கிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏரியில் உள்ள தண்ணீரில் 1 மில்லி லிட்டர் நீர் கூட பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதாகவும், மாநகராட்சி மற்றும் கட்டிட கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டதால் நுண் தாவரங்கள் மற்றும் நீர்த்தாவரங்கள் அதிகரித்ததால் ஏரி நீர் முற்றிலும் மாசடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏரியில் மாசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து கர்நாடக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கை ஒன்றினை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தது, அவை முற்றிலும் தவறான அறிக்கை என்றும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆகஸ்டு மாதம் முதல் நச்சு வாயு காரணமாக 12 முறை பெல்லந்தூர் ஏரியில் தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டதாக அரசு அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது