source: ns7.tv
தமிழக அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் அழுத்தம் தர முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக விமர்சித்தார்.
ஜெயலலிதா மரண விவகாரத்தில், அமைச்சர் சி.வி.சண்முகமே ஆவேசமாக பேட்டியளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே இந்த விவகாரத்தில் திமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரியதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தாக்கல் செய்வது வெட்கக்கேடானது என்றும், ஃபெயிலியர் பேப்பர்களை ஆளுநர் படித்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியது. திமுகவை தொடர்ந்து, அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, கஜா புயல் பாதிப்புகளை இன்னமும் கணக்கிடவில்லை எனவும், அரசு இயந்திரம் செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா இறந்து ஓராண்டிற்குப் பிறகு சட்ட அமைச்சர் சந்தேகம் எழுப்பியிருப்பதாகவும், தற்போது இந்த சந்தேகம் எழுந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.