வியாழன், 3 ஜனவரி, 2019

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதா காங்கிரஸ்? அரசியல்வட்டாரத்தில் பரபரப்பு! January 03, 2019

source: ns7.tv

Image

மெகா கூட்டணி என்ற இலக்கோடு பயணித்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் தனித்து போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது. 
மெகா கூட்டணி என்ற எண்ணத்தோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பாஜக என்னும் பலம் வாய்ந்த சக்தியை எதிர்க்க கூட்டணி அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி மாறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாகவும், அதன் காரணமாக, வட மாநிலங்களில் தனித்து போட்டியிட அக்கட்சி தலைமை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் காங்கிரசை இணைக்க அக்கட்சிகள் சுணக்கம் காட்டி வருகின்றன. மேற்குவங்கத்திலும், மிக குறைந்த தொகுதிகளை கொடுக்கவே மம்தா பானர்ஜி விரும்புவதாக கூறப்படுகிறது. காங்கிரசும் மேற்கு வங்கத்தில் கூட்டணி இன்றி போட்டியிடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. அம்மாநிலத்தில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் தனக்கு எதிரான வாக்குகள் பாஜகவிற்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோ சென்று விட கூடாது என கருதுகிறார் மம்தா, அதன் காரணமாகவே காங்கிரசை தனித்து விட்டு, அதன் மூலம் தனக்கு எதிரான வாக்குகளை பிரித்து விடலாம் என கணக்கு போடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விரும்பவில்லை... தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது. 
அண்மையில் மாநில தேர்தல்களில் கிடைத்த வெற்றி காங்கிரசின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டாலும் காங்கிரசின் இந்த முடிவு தற்போது தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில், மெகா கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால், வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விடும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. ஏனெனில், உத்தரபிரதேசம் போன்ற மிகப்பெரிய மாநிலங்களில் பாஜக முன்னிலை பெறுமாயின் அது அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வழிவகுக்கும். 
பாஜகவின் அடுத்த தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் வட மாநிலங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. அந்த மாநிலங்களில் பாஜகவை தனித்து எதிர்க்க காங்கிரஸ் தயாராகி வருகிறது என்பது தான் தற்போதைய நிலவரம். ஒரு வேளை தங்களின் எண்ணம் பலித்து விட்டால் அறுதி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கலாம் என்பது காங்கிரஸ் கட்சியினரின் திட்டம். ஆனால் அது அவர்களுக்கு தோல்வியை அளிக்குமாயின் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது. இந்த நிலையில் காங்கிரஸ் என்ன வியூகத்தை எடுக்க போகிறது என்பது தற்போது எழுந்திருக்கும் அரசியல் கேள்வி. மெகா கூட்டணி அமைக்க போராடுமா? அல்லது தனித்தே களம் கண்டு பாஜகவை வீழ்த்த தயாராகிறதா என்பதை காலமும் களமும் தான் முடிவு செய்யும்.