வியாழன், 3 ஜனவரி, 2019

அருண் ஜெட்லி Vs ராகுல் காந்தி: ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அனல் பறக்கும் விவாதம்! January 03, 2019

source: ns7.tv

Image

போர் விமானம் பற்றி ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி விமர்சிக்க, ரஃபேல் விவகாரம் பற்றி என்னுடன் ஒற்றைக்கு ஒற்றை விவாதம் நடத்த பிரதமர் தயாரா? என ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். 
மக்களவையில் ரஃபேல் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் உண்மை அறியப்பட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை வலியுறுத்தினார். மேலும், போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக, கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியானது பற்றியும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்த ஆடியோவின் நம்பகத்தன்மைக்கு யார் உறுதியளிப்பார்கள் என்று பதில் கேள்வி கேட்டார். 
அதுமட்டுமின்றி, 4 தலைமுறைகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருக்கு, போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாதது வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்தார். எனினும், அதுபற்றி கண்டு கொள்ளாத ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்கக் கூடாது என அதிமுக உறுப்பினர்கள் அமளி எழுப்பி பாதுகாப்பதாக விமர்சித்தார். மேலும், இந்த பிரச்னை தொடர்பாக பதிலளிக்க வேண்டிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக உறுப்பினர்கள் பின்னால் ஒளிந்து கொள்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் அனல் பறந்து கொண்டிருந்த அதே நேரத்தில், சில காங்கிரஸ் உறுப்பினர்கள், அருண் ஜெட்லி பதிலளித்த போது, காகிதங்களை காற்றில் எறிந்து, தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை விமர்சிக்கும் விதமாகப் பேசிய ஜெட்லி, காங்கிரஸ் கட்சியினருக்கு பேப்பரில்தான் போர் விமானங்களை செய்யத் தெரியும் போலிருகிறது என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ரஃபேல் விமானங்களின் கொள்முதல் விலை பாஜகவின் ஒப்பந்தத்தில் உயர்ந்துள்ளது பற்றியும், ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், அனில் அம்பானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஏன் என்பது பற்றியும் பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி பிரதமருக்கு முன்வைத்தார். ஆனால், அவை அனைத்திற்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான் மக்களவையில் பதிலளித்தார். இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரம் குறித்து தன்னுடன் விவாதிக்க பிரதமர் மோடி பயப்படுவதாக குறிப்பிட்டார். வெறும் 20 நிமிடங்கள் தம்முடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த மோடி தயாராக இருக்கிறாரா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.