source ns7.tv
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மாநில அரசின் போக்கு முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவியை ஓராண்டு நீட்டித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இந்நிலையில் தமக்கு இதுவரை அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தமக்கு எந்த உதவியும் செய்யவில்லை என பொன்.மாணிக்கவேல் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கூறினார்.
வேறு பணிகளை கவனித்து வரும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை தங்கள் பணிக்கு திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்தியிருக்கிறார் என்றும், அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் முறையாக இல்லை என்றும், தேவையெனில் இந்த வழக்கில் நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக தெரிவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.