திங்கள், 11 நவம்பர், 2019

திமுகவின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாகவும் மாறுவேன் - மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு.

credit ns7.tv
Image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாகவும் மாறுவேன் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளார் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மறைந்த திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
 
தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், அடிப்படை பண்புகளுக்கு ஊறுவிளைவிக்காமல் அரசியல் சட்டத்தை திருத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது, அனைத்து மொழிகளுக்கும் அதிகாரம் அளிப்பது, தேர்தல் வெற்றியின் விகிதாச்சாரம் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே, திமுக பொதுச்செயலாளருக்கு மட்டுமே தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவில் மாற்றம் செய்யும் அதிகாரம் இருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பொறுப்புகள் வகிக்க முடியாது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் கிளை அமைப்புகளை தொடங்கலாம் என்றும் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயற்குழு, பொதுக்குழு அமைக்கலாம் என்பன உள்ளிட்ட திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களை கட்சி தலைவருக்கு அளித்துள்ளது ஜனநாயக ரீதியான முடிவு என திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சற்று உடல்நலிவுற்று இருப்பதால் அவருக்கான அதிகாரங்கள் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு, கட்சியின் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.