வியாழன், 7 நவம்பர், 2019

சிவசேனாவின் முதல்வர் கனவுக்கு தடை போட்ட சரத் பவார்...!


மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என சரத்பவார் அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய போகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. எந்த கட்சிக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்ற பரபரப்பு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகியும் ஓயவில்லை. கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்த பாஜக - சிவசேனா கட்சிகள் முதல்வர் பதவிக்காக அடித்துக் கொள்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நிலவி வருகிறது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி.. அதுவும் முதல் இரண்டரை ஆண்டுகள் என்பது தான் சிவசேனா வைக்கும் கோரிக்கை... 
இதனிடையே சிவசேனா எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்க, சிவசேனாவோ முதலமைச்சர் பதவிக்காக மகாராஷ்டிராவில் 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி பேச்சு நடத்தியது. நிலையான ஆட்சி அமைப்பதற்காக பாஜக, சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டன. 
அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய சரத்பவார், நேற்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் சரத்பவார் அளித்த பேட்டி, கிட்டத்தட்ட மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பை இறுதிக்கட்டத்திற்கு நகர்த்தி உள்ளது. 
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் எனக் கருதியே மக்கள் வாக்களித்ததாகவும், எனவே, தாங்கள் எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் சிவசேனாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என பகிரங்கமாக அறிவித்தார்.
சரத்பவார் என்ற ஆளுமையின் இந்த அறிவிப்பால், மகாராஷ்டிரா அரசியலில் இரண்டு விதமான முடிவுகள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது சிவசேனா வேறு வழியின்றி பாஜகவிடம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகி மீண்டும் தேர்தலை சந்திப்பதுதான். 
இதனிடையே ஆளுநரை இன்று சந்திக்கிறார் மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேந்திர பட்நாவிஸ். தேர்தல் முடிவுகள் வெளிவந்த 2 வாரங்கள் கடந்த பின்னரும் ஆட்சி கட்டிலில் யார் அமர போகிறார்கள் என்ற கேள்விக்கான விடை இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக தெரிகிறது. 

credit ns7.tv