திங்கள், 4 நவம்பர், 2019

தலைநகர் டெல்லியில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு...!


Image
டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் தவிர்க்க முடியாத பிரச்சனையாக உருப்பெற்றுள்ளது காற்று மாசு. மூச்சுத்திணறலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்துள்ள நிலையில், எங்கு பார்த்தாலும் முகமூடி அணிந்து பயணிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  
அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை முழுமையாக தீர்க்க முடியவில்லை.
காற்று மாசு காரணமாக பகல் நேரங்களிலும் கூட போதிய வெளிச்சமில்லாததால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. இதோடு மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வர இருந்த 32 விமானங்கள் பல்வேறு நகர்களுக்கு திருப்பி விடப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் காற்று மாசு தீவிரத்தால் அடைந்துள்ளதால் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், சாலையோரங்களில் உள்ள மரங்களின் மீது தண்ணீர் தெளிக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கார்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கும் நடைமுறை திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. 
காற்று மண்டலத்தில் நச்சுப் பொருட்களின் அளவு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்த டெல்லி அரசும், பிற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
credit ns7.tv