திங்கள், 4 நவம்பர், 2019

வள்ளுவருக்கு காவி கட்டிய விவகாரம்: சமூகவலைதளங்களில் வெடித்த கருத்து போர்...!


Image
தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி பூசப்பட்டிருப்பது, இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில், அனல் பறக்கும் விவாதமும் அரங்கேறி வருகிறது.
தாய்லாந்தில், தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வள்ளுவரின் படம், காவி உடையில், திருநீறு பட்டையுடன் வெளியிடப்பட்டிருந்தது, சமூக வலைத்தளங்களில், அனல் பறக்கும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. 
தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவு:
கடவுளை தூற்றி, இறை நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று, அன்றே வள்ளுவர் சொன்னதை, இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்ட்டுகளும், அறிந்து தெளிய வேண்டும், என பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்:
தமிழக பாஜகவின் இணையதளத்தில், காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவரை, காவிக்கூட்டம் தமது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம், என்று விமர்சித்துள்ளார்.  
எத்தனை வர்ணம் பூசினாலும், பாஜகவின் வர்ண சாயம் வெளுத்துவிடும், என்று கூறியுள்ள ஸ்டாலின், சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள், என்று ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில், வள்ளுவமானது வடிமைக்கப்பட்டதாகக் கூறினார்.  எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, என்பதையே, பகவத் கீதையில் கண்ணனும் கூறுவதாக, ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு சாயம் பூசுவதை விமர்சித்தும், வரவேற்றும் நெட்டிசன்கள் அனல் பறக்கும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். சில நெட்டிசன்களோ, திருவள்ளுவர் மதங்களை கடந்தவர் என்பதை விளக்கும் விதமாக, மும்மத உடைகளுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டனர். 
மு.க.ஸ்டாலினுக்கு பாஜக அளித்த பதில்:
இறுதியில், யாகாவார் ஆயினும் நாகாக்க என்ற எளிய திருக்குறளை, தவறின்றி இருமுறை சரியான பொருளுடன் உச்சரித்தால், அந்தப் பதிவை நீக்கிவிடுவதாக, ஸ்டாலினுக்கு பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. இது ஒருபுறமிருக்க கவிஞர் வைரமுத்து, திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல் என்றும், அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர், என கேட்டுக்கொண்டுள்ளார். 

credit ns7.tv