தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜகவின் இணையத்தளத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை பூசப்பட்டதை சுட்டிக்காட்டினார். தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகப்பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றார். அழுக்கானவர்களால் திருவள்ளுவரின் சிலை அழுக்காக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செயல் வெட்கக்கேடானது என்றும் வைகோ கண்டனம் தெரிவித்தார்.
திருக்குறளை எந்த மதத்தையும், கடவுளைப் பற்றியும் கூறாமல் அதனை உலகப்பொதுமறையாக வடித்தவர் திருவள்ளுவர் எனக் கூறிய, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அதே நேரம் பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதும் கண்டனத்திற்கு உரியது எனக் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கடுமையாகக் தண்டிக்க வேண்டும் என்றார்.
திருவள்ளுவர் சிலை மீது மை பூசி அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்த விவகாரத்தை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்புவோம் என்றார்.
அமைதிப்பூங்காவான தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தஞ்சை அருகே பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பின்னால் திமுக உள்ளது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
credit ns7.tv