செவ்வாய், 5 நவம்பர், 2019

காற்றாடி, மாஞ்சா விற்றால் குண்டாஸ் பாயும் என காவல்துறை எச்சரிக்கை.....


Image
சென்னையில் மாஞ்சா நூலால் நிகழும் மரணங்கள் தொடர் கதையாகி வருகின்றன. தற்போது அபினேஷ் என்ற 3 வயது குழந்தையும் மாஞ்சா நூல் அறுத்து பலியான நிலையில், மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என, காவல்துறை எச்சரித்துள்ளது. 
சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த கோபால் என்பவர், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமது மனைவி சுமித்ரா, 3 வயது மகன் அபினேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, அறுந்துபோன காற்றாடி ஒன்று மாஞ்சா நூலுடன் பறந்து வந்துள்ளது.
இந்த நூல் சிறுவன் அபினேஷின் கழுத்தை அறுத்துள்ளது. இதில் பலத்த காயமுற்ற குழந்தையை, உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜே.ஜே நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த, மூன்று சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து மாஞ்சா நூல் கொண்ட பட்டம் விட்ட நாகராஜ்  உள்ளிட்ட இருவரை போலீசாரை கைது செய்தனர்.
இதனிடையே, மாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியவுடன், குழந்தையின் தந்தை கோபால், வாகனத்தை நிறுத்தி அதனை அகற்ற முயல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
மாஞ்சா நூலால் அறுபட்டு அபினேஷ் உயிரிழந்த ஆர்.கே.நகர் மீனாம்பாள் பாலத்தை சென்னை வடக்கு மாவட்ட இணை ஆணையர் கபில் குமார் சரட்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஞ்சா நூல்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீதும், ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து, சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்து வந்த அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளிலிருந்து காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என  எச்சரித்தார். சென்னையில் மாஞ்சா நூல் விற்பனையை முழுவதும் தடை செய்தால் மட்டுமே, இதுபோன்ற உயிருப்புகளை தடுக்க முடியும்.


credit ns7.tv