உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி தரவு அறிவியல் மற்றும் ப்ரோக்ராமிங் பாடத்திட்டங்களுக்கான ஆன்லைன் டிப்ளோமா மற்றும் பிஎஸ்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாடநெறி ஆன்லைனில் வழங்கப்படும் என்றும், தேர்வுகள் உட்பட அதன் மதிப்பீடு ஆஃப்லைன் பயன்முறையில் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “இந்த முயற்சியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சென்றடைய சென்னை ஐ.ஐ.டி இலக்கு நிர்ணயித்துள்ளது. மாணவர்கள் சான்றிதழ் படிப்பு , பட்டய படிப்பு( டிப்ளோமா), பட்டப் படிப்பு (டிகிரி) என எந்த நிலையிலும் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடிப்படை வகுப்பில் (பவுண்டேஷன் கோர்ஸ்) தொடங்க வேண்டும், கல்லூரி அளவில் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக டிப்ளோமா மட்டத்தில் சேரலாம்” என்று தெரிவித்தார்
பாடநெறி ஆறு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஒரு வருடம் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டயப் படிப்போடு வெளியேறலாம். மூன்று ஆண்டுகள் பாடத்திட்டத்தை முடித்த மாணவர்களுக்கு டிகிரி பட்டம் வழங்கப்படுகிறது.
தொழில்துறையின் பங்களிப்புடன் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி தெரிவிக்கிறது .முதல் ஆண்டு மாணவர்கள் ப்ரோக்ராமிங் மற்றும் தரவு அறிவியலின் அடிப்படைகளை கற்றுக்கொள்வார்கள். டிப்ளோமா படிப்புகளில், பாடத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கற்பிக்கப்படும். இறுதி கட்டத்தில் மாணவர்கள் சிறப்பு இயல்பு ( Specialisation) பற்றி அறிந்து கொள்வார்கள். மூன்று ஆண்டு பாடத்த்திட்டத்தை முடித்த மாணவர்களுக்கு பிஎஸ்சி பட்டம் வழங்கப்படும்.
ஆசிரியர்கள் காணொளி வகுப்புகள், வாராந்திர முன்னுரிமைப் பணிகள் (Assignments) மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தகுதியின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள், தகுதித் தேர்வுக்கு ரூ .3,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வாரங்களில் வழங்கப்பட்ட முன்னுரிமைப் பணிகளில் குறைந்தபட்ச தேவையான மதிப்பெண்களைப் பெறுபவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும். தகுதி தேர்வில் குறைந்தபட்ச தேவையான மதிப்பெண்களைப் பெறுபவர்கள்,அடிப்படை வகுப்புக்கு பதிவு செய்யப்படுவார்கள்.