இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் 'கறுப்பர் கூட்டம்' சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, வீடியோ வெளியிட்டதாக அதன் உரிமையாளர் செந்தில் வாசன் சென்னை வேளச்சேரியில் கைது செய்யப்பட்டார். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழக போலீசார் தேடி வந்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சுரேந்தர் சரணடைய சென்றார். தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், சரணை ஏற்க முடியாது என கூறி சென்னையில் இருக்கும் குற்ற பிரிவு போலீசாருக்கு சுரேந்தர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக போலீசார் சுரேந்தரை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சென்னை போலீசாருக்காக காத்திருக்கும் நேரத்தில் சுரேந்தர், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுடன் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கோஷங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில், சுரேந்தர் மற்றும் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.