வெள்ளி, 3 ஜூலை, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 62 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 57 பேர் பலியாகியுள்ளதால்,  இந்நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பலியான 57 பேரில், 35 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 56 புள்ளி ஒன்பது நான்கு சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அறிகுறி இருப்பவர்களுக்கும், அறிகுறி இல்லாதவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.