வெள்ளி, 3 ஜூலை, 2020

தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் ஜூலை 6 முதல் திறப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்படுள்ள இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள், வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊடரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் உள்ள 3,400க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. 

 


இதனிடையே கடந்த மாதம், முதல் கட்ட ஊரடங்கு தளர்வின்போது (Unlock1) இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் (ஏ.எஸ்.ஐ) கீழ் உள்ள சுமார் 820 மதத்தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதனால் மீதமுள்ள நினைவுச்சின்னங்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. 

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் மூடப்பட்டுள்ள செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட 3000 நினைவுச் சின்னங்கள் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளன. இந்த தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பிரல்ஹாத் சிங் படேல் ட்விட்டரில் அறிவித்தார்.