வியாழன், 2 ஜூலை, 2020

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பா? செங்கோட்டையன் பதில்

அரசுப்  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான இறுதி முடிவை  முதல்வர் மிக விரைவில் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் – குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,” இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியக்கூறாக இருக்காது. சூழ்நிலைகள் மாறுகின்ற போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை அமைச்சர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கலந்து பேசி அதன் பிறகு முதல்வர்  முடிவினை மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தனியார் பள்ளிகளில்  மேற்கொள்ளப்படும்  ஆன்லைன் வகுப்பு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டரில், ” ஆன்லைன் வகுப்புகள் ஒழுங்குபடுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அனைத்து அலுவலர் பெருமக்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். மத்திய அரசும் அதைப்பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் ” என்று பதிவு செய்திருந்தார்.

தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான தனியார்  பள்ளிகள், இணைய வழிக் கல்வியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.ஆன்லைன் வகுப்பிலும் பள்ளிச் சீருடைகள் அணிய மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும், வகுப்பு நேரங்கள் ஒழுங்கற்ற முறையில் இருப்பதாகவும், பெற்றோர்களுக்கு அதிக பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும் பெற்றோர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.