தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான குரல்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகம் கேட்கப்படும வார்த்தை JUSTICE FOR. சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் கொடூர கொலையைத் தொடர்ந்து உருவான Justice for Jayaraj And Fenix என தொடங்கிய ஹேஷ்டேக்குகள் அடுத்தடுத்து நீண்டு கொண்டே சென்றது தமிழக அரசியலிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
Justice for Jayara And Fenix என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது. தமிழகத்தின் சூழல் பற்றி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கூட ஜெயராஜ் பென்னிக்ஸ்சிற்காக குரல் கொடுத்தனர்.
இந்த குரல் ஓய்வதற்குள்ளாகவே, அறந்தாங்கி அருகே ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமி காமுகன் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது மீண்டும் தமிழகத்தை அதிர செய்தது. justice for jayapriya என தங்களது குரலை உயர்த்தினர் தமிழக மக்கள்... உடல் முழுவதும் சிறுமி கடித்துக் குதறி வைக்கப்பட்டிருந்தது மனிதம் பற்றிய கேள்வியை எழுப்பியது. அடுத்த சில நாட்களில் செய்யூர் சசிகலா விவகாரம் பூதாகரமெடுத்தது.
செய்யூரில் சசிகலா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணியில் பாலியல் தொல்லை இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து justice for sasikala என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தான் திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் எரித்து கொல்லப்பட்டது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. justice for ganga என்ற ஹேஷ்டேக் மீண்டும் வைரலானது.
கடந்த ஜூன் 25ம் தேதியில் இருந்து கடந்த 10 நாட்களில் 4 மிகப்பெரிய அவலத்திற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தமிழக மக்கள்.
Justice for Jayaraj And Fenix
justice for jayapriya
justice for sasikala
justice for ganga
என்ற 4 விவகாரங்களுக்காக அடுத்தடுத்து குரல்கள் எழுந்துள்ளன. உண்மையில் நீதியை போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் தமிழகம் இருக்கிறதா?...
மக்கள் விழிப்புணர்வு தான் இது போன்ற நீதி குரல்களுக்கான காரணமா?
அதிமுக சொல்வது போல் சட்டம் ஒழுங்கு கட்டுக்கள் இருக்கிறதா?
இல்லை இதன் பின்னணியில் அரசியலும் இருக்கின்றதா? என்ற கேள்விகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக அரசியல் விருப்பு வெறுப்புகள் சார்ந்து தான் இங்கே நீதி குரல்கள் எழுகின்றனவா என்பதையும் அலச வேண்டியது அவசியமாகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடுத்த நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. தொடர் குரல்கள் திமுக பக்கம் இருந்து வந்து கொண்டே இருந்தன. அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என கொந்தளித்தனர் திமுகவினர்.
ஆனால் செய்யூரில் சசிகலா என்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளி வந்த போது திமுகவினர் எந்த எதிர் வினையையும் ஆற்றவில்லை... காரணம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுக பிரதிநிதிகள்... அவர்களை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், உயிரிழந்த பெண்ணின் நீதிக்காக குரல் கொடுக்க திமுக முன் வரவில்லை என்பதே, இங்கு நீதிக்கான குரல்களின் பின்னால் இருக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக.... ஜெயராஜ் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட போது, அதற்காக மிகச்சிறிய அளவில் கூட அதிமுகவினர் துடிக்கவில்லை என்ற ஆதங்கமும் எழுகிறது. மாறாக உடல்நலமில்லாமல் உயிரிழந்தார்கள் என்ற முதலமைச்சரின் அறிக்கையும், லாக்அப் டெத் இல்லை என்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேட்டியும் விமர்சனத்திற்கு உள்ளாயின. ஆனால் செய்யூர் சசிகலா விவகாரத்தில் தொடர்புடையவர்கள் திமுகவினர் என தெரிந்ததும், அக்கட்சி மீதான விமர்சனமாக சசிகலா மரணத்தை மாற்றினர் அதிமுகவினர்.
மொத்ததில் justice for jayraj bennix என்ற திமுகவினரின் ஒவ்வொரு ட்வீட்டிற்கு பின்னாலும் அதிமுக என்ற அரசியல் கட்சியும், justice for sasikala என்ற அதிமுகவினரின் ஒவ்வொரு ட்வீட்டிற்கு பின்னாலும் திமுக என்ற கட்சியும் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
கண்டிப்பாக நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கு பின்னாலும் அரசியல் என்பது அவசியமான ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு போன்ற அரசியல் அதிகம் பேசப்படும் மாநிலத்தில், நீதிக்கான குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே தான் இருக்கும். பல கட்சி ஜனநாயகம் என்ற நமது அரசியல் பாதை வெற்றி பெறுவதும் இது போன்ற நிகழ்வுகளின் போதே...
அதே வேளையில் அரசியலை தாண்டி, இது போன்ற கொடும் குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதும், குரல் கொடுப்பதும் அரசியல் கட்சிகளின் கடமையாக மாற வேண்டும் என்பதே மக்களாட்சியை விரும்பும் அனைவரது விருப்பமும்... விரைவில் செய்யூர் சசிகலா மரணத்திற்காக திமுக குரல் கொடுக்கும் என்றும், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மக்கள் குரலுக்கு முன்னதாகவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புவோம்.