சனி, 4 ஜூலை, 2020

சாத்தான்குளம் விவகாரம் - தமிழக பா.ஜ., தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, திமுக எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியும் மெர்சி அறக்கட்டளையின் நிறுவனருமான மெர்சி செந்தில்குமார் கேள்வி எழுப்பி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

மெர்சி செந்தில்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு தாய் தன் குழந்தையை பெற்று வளர்த்து எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த குழந்தை நல்ல நிலைமைக்கு வர்ற நேரத்தில.. குழந்தை உயிரோட இல்லை.. தாய் உயிரோடு இருக்கும் போது குழந்தை உயிரோட இல்லைன்னா அந்த தாய்க்கு எவ்வளவு பெரிய கஷ்டமா இருக்கும்? பெண்கள், ஆண்களுக்கு நிகராக வரவேண்டும் என்ற கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. அதேநேரத்தில் ஒரு பெண் தன் கணவனை, குழந்தையைவிட இந்த உலகத்தில் வேற எதையுமே நேசிக்கப் போவது இல்லை.

காவல்துறை எங்களுடைய நண்பன் என்ற அழகான வாசகத்தை எவ்வளவு கேலிக்குரியதாக்கிவிட்டீர்கள்? இந்த கொரோனா டைம்ல காவல்துறையினர் ஹீரோவாக இருந்தீங்க.. ஒவ்வொரு காவல்துறையினரையும் பார்க்கும் போது அவ்வளவு மரியாதையாக இருந்தீங்க என்னுடைய பல நண்பர்கள், உறவினர்கள் காவல்துறையில் இருக்கிறார்கள். அவங்களுக்கு எல்லாம் இந்த கெட்ட பெயர் வருதில்லையா?

ஒவ்வொரு காவல்துறையினரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். உங்க லோகோ என்ன? வாய்மையே வெல்லும் என்பதுதானே உங்க லோகோ? முருகண்ண சொன்னாராம் (தமிழக பாஜக தலைவர் எல். முருகன்) இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தனும்மானு.
ஏன் முருகண்ணே (தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்) .. நீங்களும் உங்களும் பையனும் வெளியில போய்ட்டு வீட்டுக்கு திரும்பலை… அண்ணிக்கு வருத்தமா இருக்காது? உங்க நிலைமையில வெச்சு பாருங்க ஒரு தாய்க்கு தன் கணவரும் இல்லை, பிள்ளையும் இல்லை.. இதை மெர்சி செந்தில்குமாராகிய நான் அனைத்து அறக்கட்டளைகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இனி இந்த தேசத்தில் யார் ஒருவரும் இந்த மாதிரி இறக்கக் கூடாது என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு மெர்சி செந்தில்குமார் கூறியுள்ளார்.