வெள்ளி, 3 ஜூலை, 2020

கொரோனாவால் பலியானோரின் உடல்களை ஒப்படைக்கும் விவகாரம்: சுகாதார அமைச்சகத்தின் சுற்றறிக்கை!

கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் உடலை உறவினர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 


இந்தியாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து,  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தொடந்து இறந்தவர்கள் மூலம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே கொரோனாவைத் தவிர பிற வியாதிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயளிகளின் உடல்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதால் உடல்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

1

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
இதுபோல கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்களின் உடல்கள் உடனடியாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் உடல்களை அடக்கம் செய்வதற்கு மத்திய சுகாதாரத்துறையால் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இறுதி சடங்குகள் செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இதுபோன்ற சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்தவர்களுக்கு இறுதியில் கொரோனா இருப்பது தெரியவந்தால், தொடர்பு பட்டியல், கண்காணிப்பு போன்றவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை பின்னர் மேற்கொள்ளலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.