கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில், இரண்டு அடுக்கு தரை தளத்தை தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு 40 லட்ச ரூபாய் செலவில் நடந்து வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த பிப்ரவரி 19 முதல் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகிறது. கீழடியில் கதிரேசன் நிலத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் இருவண்ண பானைகள், சிறிய வகை உலைகலன், பாசி, பெரிய விலங்கின் எலும்பு, இணைப்பு குழாய் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக, செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்ட குழியில் ஆறு அடி ஆழத்தில் புதிய தரை தளம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். செங்கற்கள் பிடிமானத்திற்காக வெண்மை நிற மண் பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. இப்பகுதியில் தொழிற்சாலை இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.