தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1.70 லட்சத்தை கடந்தது.இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கடந்த ஒரு மாதமாக தினமும் 50க்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிதல், ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் ஆகிய வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வலியுறுத்திவருகிறது.
மேலும், தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 112 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் 51,640 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 78 பேர் உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 4,059 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,294 என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15004 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் 405, செங்கல்பட்டு 306, விருதுநகர் 265, காஞ்சிபுரம் 220, மதுரை 206, தூத்துக்குடி 151, திண்டுக்கல் 139, திருச்சி 138, கோவை 135, திருவண்ணாமலை 134, வேலூர் 133, கன்னியாகுமரி 131, ராமநாதபுரம் 126, தேனி 120, கள்ளக்குறிச்சி 112, திருநெல்வேலி 103 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.