வியாழன், 3 செப்டம்பர், 2020

பிஎம் கேர்ஸ் நிதி: நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடாதது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி!

 

Image

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ்  நிவாரணப் பணிகளுக்கென பி.எம்.கேர்ஸ் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதில் எவ்வளவு நன்கொடை பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பாக வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பி.எம்-கேர்ஸ் நிதி குறித்த தணிக்கை அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், கடந்த மார்ச் 26-ல் தொடங்கப்பட்ட  பிஎம் கேர்ஸ் நிதிக்கு முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பி.எம்.கேர்ஸுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெயர்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். பி.எம்.கேர்ஸ் தெரிகிறது. அதன் அறக்கட்டளை உறுப்பினர்கள் யார் எனத் தெரிகிறது. ஆனால், நன்கொடையாளர்கள் பெயர்களைக் கூற அச்சப்படுவது ஏன்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு தொகையை விட அதிகமாக நிதி தரும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டியது அனைத்துத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.