வியாழன், 3 செப்டம்பர், 2020

சாலை விபத்து குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரம்: தமிழகத்தின் நிலை என்ன?

 இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் 4,21,104 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பல்வேறு வகையான விபத்துக்கள், தற்கொலைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான விபத்து தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடுமுழுவதும் ஏற்பட்ட பல்வேறு விபத்தில் 4,21,104 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2018 ஆண்டை காட்டிலும் 2.3% அதிகம் (அதாவது 2018 ஆண்டு உயிரிழப்புகள் 4,11,824. 2019 ஆம் ஆண்டு 4,21,104)  

 

இதில் கடந்த ஆண்டு மொத்த உயிரிழப்புகளில் 8,145 (1.9%) உயிரிழப்புகள் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ளன. மீதமுள்ள 4,12,959 (98.1%) உயிரிழப்புள் மற்ற விபத்துகளால் ஏற்பட்டுள்ளன. 

 

2019 ஆம் ஆண்டு நாட்டில் பல்வேறு விபத்துகளால் அதிகபட்ச உயிரிழப்புகளை பதிவு செய்த மாநிலங்கள்

மகாராஷ்டிரா 70,329, மத்தியப் பிரதேஷம் 42,431, உத்தரப் பிரதேஷம் 40,596, ராஜஸ்தான் 28,697, கர்நாடகா 25,451, குஜராத் 23,910 தமிழ்நாடு 22,404 உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளன. 

 

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு விபத்தால் அதிகம் உயிரிழப்பு விகிதம் கொண்ட மாநலங்கள் மற்றும் யூனியன் பிரதேஷங்கள் பட்டியலில் புதுச்சேரி 72.8% முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக சட்டீஸ்கர் 68.6% மகாராஷ்டிரா 57.4% ஹரியாணா 54.3% கோவா 51.5% மத்தியப் பிரதேஷம் 51.4% உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 31.4% உள்ளது. 

 

விபத்துகள்

2018 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. 

 

2018 ஆம் ஆண்டு 4,74,638 ஆக நாட்டில் பதிவாகியிருந்த போக்குவரத்து விபத்துகள் கடந்த ஆண்டு 4,67,171 ஆக குறைந்துள்ளன.

 

இதில் தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு 66,110 ஆக பதிவான போக்குவரத்து விபத்துக்கள் கடந்த ஆண்டு 59,499 ஆக குறைந்துள்ளது. 

 

இருப்பினும் மத்தியப் பிரதேஷம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேஷம் ஆகிய மாநிலங்களில் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

 

ஆனால் போக்குவரத்து விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த 2018 ஆம் ஆண்டை காட்டிலும் 1.3% உயர்ந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 1,78,832 ஆக இருந்த போக்குவரத்து விபத்து உயிரிழப்புகள் கடந்த ஆண்டு 1,81,113 ஆக உயர்ந்துள்ளது. 

 

விபத்துகளில் அதிகம் உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்கள்

உத்தரப் பிரதேஷம், 27,661, மகாராஷ்டிரா 18,524, மத்தியப் பிரதேஷம் 13,497 உயிரிழப்புகளை கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 12,611 உயிரிழப்புகளை கொண்டுள்ளது. 

 

முக்கிய நகரங்களில் விபத்துகளின் விபரங்கள்
 
கடந்த ஆண்டு சுமார் 53 முக்கிய நகரங்களில் 69,064 போக்குவரத்து விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக 6871 விபத்துகளும் டெல்லியில் 5,349 விபத்துகளும் பதிவாகியுள்ளன.

 

முக்கிய நகரங்களில் பதிவான 69,064 விபத்துகளில் 59,070 பேர் காயமடைந்துள்ளனர். 16,538 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக உயிரிழப்புகளை கொண்டா நகரமாக டெல்லி உள்ளது. அங்கு 2,207 உயிரிழப்புகள். இதற்கு அடுத்தபடியாக சென்னை 1,252 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் 859 உயிரிழப்புகளுடன் ஜெய்பூர் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

 

சாலை விபத்துகள்

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4,37,396 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது குறைவு. 2018 ல் 4,45,514 விபத்துகள் பதிவான நிலையில் 2019ல் 4,37,396 ஆக குறைந்துள்ளது.

 

அதேசமயம் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2018 ஆம் ஆண்டை காட்டிலும் 1.3% உயர்ந்துள்ளது. 2018 ல் 1,52,780 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில் கடந்த ஆண்டு அது 1,54,732 ஆக அதிகரித்துள்ளது. 

 

இதில் கடந்த ஆண்டு மிசோரம், பஞ்சாப், உத்தரப் பிரதேஷம் ஆகிய மாநிலங்களில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை காட்டிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மிசோரமில் பதிவான சாலை 57 சாலை விபத்துகளில் 63 உயிரிழப்பு, 25 பேர் காயமடைந்துள்ளனர். பஞ்சாபில் பதிவான 6,316 சாலை விபத்துகளில் 4,613 உயிரிழப்பு 3,726 பேர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் பதிவான 37,537 சாலை விபத்துகளில் 23,285 உயிரிழப்புகள் 22,251 பேர் காயமடைந்துள்ளனர். 

 

இருப்பினும் நாட்டில் அதிக சாலை விபத்துகள் பதிவாகிய மாநிலங்களில் தமிழகம் இந்த முறையும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் 57,228 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்த படியாக மத்தியப் பிரதேஷத்தில் 51,641 விபத்துகளும் கர்நாடகாவில் 40,644 விபத்துகள் பதிவாகியுள்ளன. 

 

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட1,54,732 சாலை விபத்து உயிரிழப்புகளில் 58,747 உயிரிழப்புகள் இருசக்கர வாகன விபத்தில் ஏற்பட்டுள்ளன. இது மொத்த சாலை விபத்து உயிரிழப்பில் 38% ஆகும்.  அடுத்தபடியாக லாரி மூலம் 22,637 உயிரிழப்புகளும் கார் மூலம் 21,196 உயிரிழப்புகளும் பேருந்து மூலம் 9,192 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

 

இதில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்களில் 23,285 உயிரிழப்புகளுடன் உத்தரப் பிரதேஷம் முதலிடத்திலும் 14,608 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் 13,856 உயிரிழப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 10525 சாலை விபத்து உயிரிழப்புகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 


ரயில்வே விபத்துகள்

ரயில்வே விபத்துகள் 2018 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு சுமார் 1.2% அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 27,643 ஆக இருந்த ரயில்வே விபத்துகள், கடந்த ஆண்டு 27,987 ஆக அதிகரித்துள்ளது. இதில் 24,619 பேர் ரயில்வே விபத்தில் உயிரிழந்ததோடு 3,569 பேர் காயமடைந்துள்ளனர். 

 

இதில் நாட்டுல் அதிக ரயில்வே விபத்துகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. 6338 ரயில்வே விபத்துகள். அதற்கு அடுத்தபடியாக 3,980 ரயில்வே விபத்துகள் உத்தரப் பிரதேஷத்தில் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்ச ரயில்வே விபத்து உயிரிழப்புகளும் இவ்விரு மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளது. மொத்த உயிரிழப்புகளான 24,619 இல் 3,916 உயிரிழப்புகள் மகாரஷ்டிராவிலும் 3,521 உயிரிழப்புகள் உத்தரப் பிரதேஷத்திலும் பதிவாகியுள்ளது. 

 

கடந்த ஆண்டில் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது மட்டும் ஏற்பட்ட உயிரிழப்புகள் 1,788. இதில் அதிகப்படியான உயிரிழப்புகள் உத்தரப் பிரதேஷ மாநிலத்திலேயே பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 851 (47.6%) உயிரிழப்புகள்.