வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பள்ளிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்க வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்து வருகின்றன.

 ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பள்ளிகளில்  கொரோனா நோய்த் தொற்று பரவலைக்  குறைக்க வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் சில வற்றை இங்கே காணலாம்.

பிரிட்டன் :  குறிப்பிட வயதுடைய ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியில் இருந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 15- 18 வயதுக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகளுக்கு திரும்பினர். இந்த  புதிய கல்வி ஆண்டுக்கான அனைத்து வகுப்புகளும் முழு நேரமாக நடைபெறுகிறது. ஐக்கிய பேரரசுவின் ஒரு பாகமாக உள்ள (United Kingdom)  ஸ்காட்லாந்தில் பள்ளிகள் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்நாட்டில் செயல்படும் 96% பள்ளிகள், பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாணவர்கள் சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குழுவினருக்கும்   பள்ளித் துவங்கும் மற்றும்  முடியும் நேரம், மதிய இடைவேளை போன்றவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக National Association for Head Teachers  என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முகக்கவசம் உள்ளிட்ட பிற பாதுகாப்பு  அம்சங்கள் குறித்த விதிகளும்  வேறுபடுகின்றன. உதாரணாமாக, இங்கிலாந்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரான்ஸ் : 

செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும்.  மாணவக் குழுக்கள் சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வகுப்பறைகள் காற்றோட்டமான சூழலில்,கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

பள்ளி வருகைப் பதிவேடு கட்டாயம்  பராமரிக்க வேண்டும். இருப்பினும், பள்ளிகள் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப பள்ளி வருகையை நிர்பந்திக்க வேண்டும். கொரோனா பாதிப்புகள் அதிகமாக உணரப்பட்டால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படலாம்.

மழலையர் பள்ளியில், ஒரே வகுப்பில் உள்ள மாணவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியதில்லை. ஆரம்பப் பள்ளிகளில், 8 முதல் 15  பேர் கொண்ட குழுக்களாக பிரித்து வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும். மாற்று வாரங்களில் ஓவ்வொரு குழுக்களும் பள்ளிக்கு வருகைத் தரவேண்டும். மீத நாட்களில் வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு வாரத்தில் குறைந்தது சில நாட்களாவது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும்.

ஜெர்மனி:  

ஆகஸ்ட்  மாத தொடக்கத்தில் இருந்து அனைவருக்கும் முழுநேரக் கல்வி தொடங்கப்பட்டது . குழந்தைகளும், ஆசிரியர்களும் பாடநேரங்களைத் தவிர்த்து முகக்கவச உறையை கட்டாயம் அணிய வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன.  சில நாட்களுக்கு முன்னதாக, நார்த் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலம் பாடநேரங்களின் போதும் கூட  மாணவர்கள் முகக்கவசம்  அணிய வேண்டும் என்ற தனது கட்டுப்பாட்டில் தளர்வு அறிவித்தது.

வகுப்பறைகளில் காற்று சுழற்சிக்கான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். முடிந்த வரை  திறந்தவெளியில் வகுப்புகள் நடைபெற வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி வருகின்றனர்.

கிரீஸ் : 
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேலும் சில நாட்கள் தாமதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

பள்ளிக்குள்  பாடநேரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் முகக்கவச உறையை அணிய வேண்டும். ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 17 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இத்தாலி: 
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்பட உள்ளன. சமூக விலகல் நெறிமுறையை உறுதி செய்ய, புதிய  ஒருவர் மட்டும் அமரும் மேசைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வரும் மாணவர்கள்  முகக்கவசம் அணிவது கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாட நேரங்களின் போது  மேசைகளுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளி இருந்தால் முகக்கவச உறையை அகற்றலாம்.

 

 

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பொது போக்குவரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. மாணவர் அல்லது ஆசிரியர் யாரேனும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை  என்னவென்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தீர்மானிக்க  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து (டச்சு ) : 
தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து  மீண்டும் செயல்படத் தொடங்கின.

மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவச உறையை அணியத் தேவையில்லை என்று அரசு வெளியிட்ட வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது. சில ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பத் தயக்கம் தெரிவிப்பதால், பெரும்பாலான பள்ளிகள் முகக்கவச உறையை நிர்பந்தித்து வருகின்றன.

மாணவர்  ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா  அறிகுறிகளைக்  காட்டும் ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வீட்டில் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

 நார்வே:  
ஏப்ரல் 27ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டன.

குழந்தைகள் முகக்கவசம் அணிவது  கட்டாயம் இல்லை. பள்ளி நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. வகுப்புகளுக்கான இடைவேளை நேரம்  மாற்றியமைக்கப்பட்டது. அறிகுறிகள்  வெளிபடுத்தும் மாணவர்களுக்கு வீட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கும் குழந்தைகளும் மழலையர் பள்ளிகளுக்கு செல்லலாம். இருப்பினும், தீவிர அறிகுறிகள் உள்ள குழந்தைகள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போலந்து: 
பள்ளிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன

வகுப்பு நேரங்களில் முகக்கவச உறைகள் கட்டாயமில்லை. பள்ளிக்குள் மற்ற இடங்களில் முகக்கவசத்தை பயன்படுத்துவது குறித்தும், பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்தும் தலைமை ஆசிரியர்கள் முடிவு  செய்ய வேண்டும். பள்ளிகள் திறப்பை மேலும் தாமதிக்க வேண்டும் என்ற  சில மாநகராட்சி அமைப்பின் கோரிக்கையை அரசு  பரிசீலிக்க வில்லை. வார்சா போன்ற நகரங்களில் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் நெருசல் நிரந்தவைகளாக உள்ளன. பள்ளி வகுப்பு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டாலும் சமூக  விலகல் நெறிமுறையை கடைபிடிப்பது கடினம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் குடும்பங்களுக்கு 10,000 ஸ்வாட்டெ (złoty)  வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ரஷ்யா:
பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.

சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிக்க பள்ளித் துவங்கும் மற்றும் முடியும் நேரம், மதிய இடைவேளை போன்றவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிபடுத்தும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால், அது கட்டாயமில்லை. .

ஆன்லைன் கல்விக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஸ்பெயின் : 
நாட்டின் அனைத்துப் பகுதியிலும் செயல்படும் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் செப்டம்பர் மாதம் 3 வாரத்திற்குள்  புதுக்கல்வி ஆண்டைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வகுப்பில் முகக்கவசம் அணிவதும், வருகையை பதிவு செய்வதும் கட்டாயமாகும். மாணவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கைகளைக் கழுவ வேண்டும். பள்ளி அல்லது வீடுகளில் மாணவர்கள் தினமும் காலை வெப்பநிலை கண்காணிப்பு சோதனைகளில் ஈடுபட  வேண்டும்.

ஸ்வீடன்: 
தொற்று  நாட்களில் கூட  பள்ளிகள் இங்கு மூடப்படவில்லை.  கோடை  விடுமுறை நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் நடுப்பகுதியில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பின . சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை  மூடுவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் உள்ளூர் நிர்வாக அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்கின்றனர்.

சமூக விலகல், கோவிட்- 19 குறித்த வழிமுறைகளைப் பின்பற்றுவது அந்தந்த பள்ளிகளின் பொறுப்பாகும். முகக்கவச உறைகள் அணிவது கட்டாயமில்லை.