அடுத்த தொற்றுநோய்க்கு உலக நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாதான் கடைசி தொற்றுநோய் என கூற முடியாது. இதுதொடர்பாக வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் அடுத்த தொற்றுநோய் வரும் போது, சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி உலகம் தயாராக இருக்க வேண்டும். இந்த தொற்றுநோயை விட அடுத்த தொற்றுநோய்க்கு முன்கூட்டியே தயாராக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் 2,74,90,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,96,867 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.