நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் அலட்சியத்தால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, ‘மத்திய அரசு நீட் தேர்வு கட்டாயம் என கூறியுள்ளது இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் நீட் தேர்வு பயத்தினால் பல மாணவர்கள் மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.