வெள்ளி, 11 செப்டம்பர், 2020

இலங்கையிலும் அமலாகும் பசுவதைச் சட்டம்! இறக்குமதிக்கு அனுமதியுண்டு

 


இலங்கையில் புதிதாக அரசு அமைத்திருக்கும் மகிந்த ராஜபக்‌ஷே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பசுக்களை இறைச்சிகாக கொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் முன்வைத்துள்ளார். இந்த யோசனையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக, எதிர்ப்புகள் இன்றி, ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்த சாசன, சமய, மற்றும் கலாச்சார அமைச்சர் என்ற ரீதியில் இந்த யோசனையை பிரதமர் முன் வைத்திருக்கிறார். இலங்கையில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த போதிலும் அதனை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் தற்போது ஆளும்கட்சிக்கு ஆதரவு வலுத்து வருவதால் இந்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள  நிலையில், உள்நாட்டு தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.